Sunday, December 18, 2011

ஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம், தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்!இன்று அரசு இயந்திரம் முழுவதும் ஊழல் சேற்றில்  முழுவதுமாக சிக்கி கிடக்கிறது. இந்தியாவில்  முதல் அமைச்சர்கள் , மந்திரிகள் , எம்.எல்.ஏ.கள் , எம்.பி.கள் ஆகிய அனைத்து பதவிகளில் இருப்பவர்களும் ஊழலில் ஊற்றுக்கண்களாக இருக்கிறார்கள். ஆயிரம் , பத்தாயிரம் ,லட்சம் என்பதெல்லாம் தாண்டி 1 லட்சம் கோடி என்ற அளவிற்கு இன்று அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். நாட்டின் இயற்கை வளங்களை தங்கள் இஷ்டத்திற்கு சூறையாடுகின்றனர்.இவ்வாறு நாட்டின் சாதரண மக்களுக்கு சேரவேண்டிய அரசின் நலத்திட்டத்தின் பயன்கள் உரியவர்களுக்கு சென்று சேராமல் ஒரு சிலரின் பாக்கெட்டில் லஞ்சமாக குவிகின்றது. 


ஊராக வேலைவாய்ப்பு திட்டம், சுய வேலை வாய்ப்பு மானியங்கள், மகளீர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, உலக வங்கியின் கடன் நிதி, என்று பல்வேறு திட்டங்களுக்கு அதிக அளவில் தற்போது அரசுகளால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் திட்டங்கள் அனைத்துமே அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் கூட்டு கொள்ளையில் சிக்கி கபாளிகரமாகிவிடுகிறது. இதனால் பெயரளவிற்கு போடப்படும் சாலைகள் ஒரு மழை பெய்தாலே உருத்தெரியாமல் போய்விடுகிறது. அரசு பொது கட்டிடங்கள் எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் கட்டப்படுகின்றன. 

 இன்று சாதாரண அரசு அதிகாரிகளே அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட பத்து மடங்கு அதிகமாக லஞ்சத்தின் மூலம் சம்பாதிக்கிறார்கள். சாதாரண அதிகாரிகளே இப்படி என்றால் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகளை பற்றி நாம் ஒன்றும் சொல்லத்தேவையில்லை. எப்போதாவது நடக்கும் ரெய்டில் கிலோக்கணக்கான தங்கங்களும், லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளும் அவர்களுடைய வங்கி லாக்கரில் இருந்து எடுக்கப்படுகின்றன. இவ்வாறு சாதாரண மக்களுக்கு சேர வேண்டிய பயன்கள் அனைத்தும் விரல் விட்டு எண்ணக்கூடிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட்டு  சேர்ந்து கொள்ளையடித்து பங்கு பிரித்துக் கொள்கின்றனர்.    

லஞ்சம் வாங்கிக்  கொண்டு முறைகேடாக அனுமதி அளிப்பதால் கொல்கத்தா மருத்துவ மனையில் நடந்த தீ விபத்தை போல விபத்துகள் நடந்து அப்பாவி மக்கள் தங்கள் உயிர்களையும், உடமைகளையும் இழக்க நேருகிறது. கர்நாடகாவில்  சுரங்க ஊழல் நடந்தது போல நாடு முழுவதும் இயற்கை செல்வங்கள் ஒரு சிலருக்கு தாரை வார்க்கப்பட்டு அரசுக்கு சேரவேண்டிய கோடிக்கணக்கான பணம் சமூக விரோதிகளின் கைகளில் கிடைக்கிறது. இதன் மூலம் சமூக விரோதிகள் வளம் பெற்று மேலும் ,மேலும் தங்கள் சுரண்டல் கரங்களை இந்த சமூகம் முழுவதற்கும் விரிக்கின்றனர். இவ்வாறு சமூகம் முழுவதற்குமான வளர்ச்சி என்பது மாறி ஒரு சிலரின் அதீத வளர்ச்சி என்பதாகவே தற்போது நிலைமை உள்ளது. 


நாட்டில் நடக்கும் அனைத்து தீமைகளுக்கும் காரணமான இந்த ஊழலை ஒழிக்காமல் இந்த சமூகம் முன்நோக்கி வளர்ந்து செல்வது என்பது பகல் கனவே ஆகும். இதை இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் நன்கு உணர்ந்துள்ளார்கள். அதனால் தான் ஊழல் எதிர்ப்பு இயக்கம் அது தோன்றி சில மாதங்களிலேயே இந்தியா முழுவதும் பல்கி பரவி அனைத்து மக்களின் ஆதரவினையும் பெற்றுள்ளது.மக்கள் பிரதிநிதிகள் முன் வைத்த ஜன் லோக்பால் வரைவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. அப்படியும் கூட லோக்பால் மசோதாவை நிறைவேற்றாமல் எவ்வாறெல்லாம் தாமதம் செய்யமுடியுமோ  அவ்வாறு தாமதம் செய்து வருகிறது.

 தற்போது ஊழலுக்கு எதிரான உள்ள சட்டங்கள் அனைத்தும் எவ்வாறு ஊழல் அரசியல் வாதிகளாலும், அதிகாரிகளாலும் வளைக்கப்படுகின்றன என்பதை நாம் பார்த்து வருகிறோம். அதுவும் பல்வேறு ஓட்டைகள் உள்ளடங்கிய சட்டமாக லோக்பால் சட்டம் வருமேயானால், அந்த சட்டத்தை ஊழல் வாதிகள் மதிக்கக்கூட மாட்டார்கள் . ஆகவே மக்கள் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள வலிமையான லோக்பால் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் வரை தொடர் மக்கள் திரள் போராட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும். 

எங்கும் எதிலும் வியாப்பித்திருக்கும் ஊழலுக்கு  எதிராக அனைத்து பகுதிகளிலும் மக்கள் போராட்ட குழுக்களை அமைக்க, இந்த சமூகம் மேம்படுத்தப்பட்ட வேண்டும் என்பதில் அக்கறை உள்ள இளைஞர்கள் முன்வரவேண்டும். அதன் மூலம் இந்த ஊழலுக்கு எதிரான போராட்டம் வலிமையாக எடுத்துச்செல்லப்பட வேண்டும். 


ஊழலுக்கு எதிராக ஒன்றுதிரள்வோம்!
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கைகளை பலப்படுத்துவோம்

Comments :

0 comments to “ஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம், தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்!”


Post a Comment