பஸ் கட்டண உயர்விற்கு பிறகு பயணம் என்பதே அவ்வளவு இனிமையானதாக சாதாரண மக்களுக்கு இல்லாமல் போயுள்ள இந்த சூழ்நிலையில் பின்வரும் இடர்களையும் சாதாரண மக்கள் சந்திக்க வேண்டி உள்ளது. அவை ;
அரசு பேருந்துகள்:
1.சரியான மாற்றுப் பேருந்து வசதி இல்லை.
2.பேருந்துகள் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை.
3. தொலைதூரப்பேருந்துகளில் இடையில் இறங்கும் பயணிகளை ஏற்ற மறுப்பது.
4. இரண்டு ஓட்டுனர்களை பணியில் அமர்த்தாதது.
பஸ் நிலையங்கள்:
1.சுகாதாரமான கழிவறை வசதி இல்லை
2. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கழிவறைகளிலும் சுகாதாரம் இல்லை
3. பேருந்து நிலைய கடைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது
4. தரம் குறைந்த பொருள்களை விற்பது ,சுகாதாரமற்ற உணவு பொருள்களை விற்பது
5.பயணிகள் உட்கார இருக்கை வசதி செய்து தரப்படுவதில்லை.
தனியார் ஆம்னி பஸ்கள்:
1. பெர்மிட் வாங்காத பஸ்கள் அனுமதிப்பது
2.அதிக கட்டணம் வசூலிப்பது
3. அனைத்து விதிமீறல்களையும் அரசு அனுமதிப்பது.
மோட்டல்கள் ( மரண உணவகம் ):
1. மோட்டல்கள் தரமற்ற உணவை அதிக விலைக்கு விற்கின்றன.
2. கழிவறைகள் சுகாதாரமற்ற தன்மை
3. ஓட்டுனர் நடத்துனருக்கு இலவச உணவு
போன்ற பிரச்னைகள் விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் ஒவ்வொரு பயணியும் அனுபவிக்கும் துயரங்கள் ஆகும். இந்த பிரச்னைகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் என்ன பதில் சொல்லப் போகிறது, என்று அறிய பின்வரும் கேள்விகளை தகவல் அறியும் சட்டப்படி கேட்டோம் அதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழகமும் தனது பதிலை அனுப்பி வைத்தது .கீழே நாம் கேட்ட கேள்வியும் , அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் நமக்கு அனுப்பிய பதிலும் தொகுத்து தரப்படுகிறது.
கடித எண்: 258 /34927 /பொதஅ/தஅ உ ச /11 நாள் : 21 .07 .2011
கேள்வி:1. ஒரு தொலைதூர பேருந்திற்கு (ஒரு ட்ரிப்பிற்கு) எந்தனை ஓட்டுனர்கள் பணி செய்கிறார்கள் ? (சிறப்பு / சொகுசு /சாதாரண பேருந்துகள் வகை பிரித்து தகவல் தரவும் )
அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தந்த பதில் : தடத்தின் நீளத்தைப் பொறுத்து ஓட்டுனர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள்.
கேள்வி: 2. சாதாரண தொலைதூர பேருந்துகளில் (ரிசர்வேசன் அல்லாத பேருந்துகள்) , கடைசி நிறுத்தத்தில் இறங்கும் பயணிகளுக்கு இருக்கை வசதியில் முன்னுரிமை உள்ளதா ?
அ.வி.போ.க பதில் : அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தொலைதூர தடங்களில் பேருந்துகளை இயக்கி வருவதால் தொலை தூர பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
கேள்வி:3. சாதாரண தொலைதூர பேருந்துகளில் (ரிசர்வேசன் அல்லாதா பேருந்துகள்) இடையில் வரும் நிறுத்தத்தில் இறங்கும் பயணிகளுக்கு இருக்கை வசதி அனுமதிக்கப்படுகிறதா ? அதில் கடைசி நிறுத்தத்தில் இறங்கும் பயணிகள் மற்றும் இடையில் வரும் நிறுத்தத்தில் இறங்கும் பயணிகள் என்று ஏதாவது வேறுபாடு உண்டா ? இருக்கை வசதி சம்பதமாக முடிவு எடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?.
அ.வி.போ.க பதில் : முன்பதிவு இல்லாத பேருந்துகளில் காலியாக உள்ள இருக்கைகளை பொறுத்து பேருந்தின் நடத்துனர் பயணிகளை ஏற்றி இருக்கைகளை பூர்த்தி செய்வார் .
கேள்வி 4: சாதாரண தொலைதூர பேருந்துகளில் (ரிசர்வேசன் அல்லாதா பேருந்துகள்) ஓட்டுனர்கள் ,மற்றும் நடத்துனர்களுக்கு தனியாக எத்தனை இருக்கை வசதி ரிசர்வேசன் அனுமதிக்கப்படுகிறது?
அ.வி.போ.க பதில் : தொலைதூர தடங்களில் ஓட்டுனர் ஓய்வு எடுக்க ஒரு இருக்கை அனுமதிக்கப்படுகிறது.
கேள்வி: 5. பேருந்து நிலைய கடைகளில் எம்.ஆர்.பி விலையை விட அதிக விலை வைத்து பொருள்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா ? அப்படி விற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?
அ.வி.போ.க பதில் : பேருந்து நிலைய கடைகளில் எம்.ஆர்.பி. விலையை விட அதிக விலை வைத்து பொருள்களை விற்க அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அனுமதி கொடுக்கவில்லை. அப்படி விற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் ஆதாரத்துடன் புகார் கொடுக்கலாம்.
கேள்வி: 6. பேருந்து ஓட்டுனர்கள் ,மற்றும் நடத்துனர்களுக்கு கண்டிப்பாக குறிப்பிட்ட மோட்டல்களில் நிறுத்தும்படி போக்குவரத்து கழகத்தால் அறிவுறுத்தப்படுகிறார்களா? மோட்டல்களின் தரமற்ற உணவு பொருள்களால் பயணிகளுக்கு வரும் பிணிகளுக்கு பேருந்து கழகம் பொறுப்பேற்றுக்கொள்ளுமா? அந்த மோட்டல்களில் ஓட்டுனர்கள் , மற்றும் நடத்துனர்களுக்கு இலவசமாக உணவு தர உ த்தரவிடப்பட்டுள்ளதா ?
அ.வி.போ.க பதில் : பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கண்டிப்பாக குறிப்பிட்ட மோட்டல்களில் நிறுத்தும்படி போக்குவரத்துக் கழகத்தால் அறிவுறுத்தப்பட வில்லை. தற்பொழுது கழகத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள உணவு விடுதியிலும் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப உணவை தேர்வு செய்து கொள்ளும் வசதி, கழிவறை வசதி மற்றும் போதுமான தண்ணீர் வசதி , ஆகியவை ஒருங்கிணைந்து சுகாதார முறையில் கிடைக்கும் சாலையோர உணவு விடுதியிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் நிறுத்தாமல் உணவு நேரத்தை கருத்திற்கொண்டு அருகில் உள்ள உணவகத்தில் நிறுத்தப்படுகிறது. மேலும் மோட்டல்களில் தரமற்ற உணவு பொருள்களால் வரும் பிணிகளுக்கு பேருந்துக் கழகம் பொறுப்பேற்றுக் கொள்ளாது. அந்த மோட்டல்களில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு இலவசமாக உணவு தரவும் எந்த ஒரு முறையிலும் உத்தரவு கொடுக்கப்பட வில்லை.
கேள்வி:7. தமிழகத்தில் எத்தனை தனியார் வண்டிகளுக்கு தொலை தூர பேருந்தாக இயங்க பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது? அந்த பட்டியலை தரவும். &
8. அனுமதி இல்லாமல் இயங்கும் தனியார் வாகனங்களுக்கு என்ன தண்டனை வழக்கப்படும் ? யாரிடம் புகார் செய்வது?
அ.வி.போ.க பதில் : இது குறித்து போக்குவரத்து ஆணையர் , சேப்பாக்கம் , சென்னை , அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் பதில் தந்துள்ளது. அரசு பேருந்து சுகாதாரமாக பராமரிக்கப்படாதது, பேருந்து நிலையங்களில் கழிவறைகள் சுத்தமாக இல்லாமல் இருப்பது, மோட்டல்கள் , பேருந்து நிலைய கடைகளில் தாறுமாறாக எம்.ஆர்.பி விலையை விட அதிகமான விலைக்கு பொருள்கள் விற்கப்படுவது குறித்து தொடர்ந்து அதிகாரிகளை கேள்வி கேட்பதோடு ஜனநாகய சக்திகள் ஓன்று சேர்ந்து போராடுவதன் மூலம் மட்டுமே இந்த அனைத்து பிரச்னைகளுக்குமான சரியான தீர்வை நோக்கி பயணிக்க முடியும் .
Comments :
0 comments to “அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்”
Post a Comment