Friday, August 6, 2010

போபால் விசவாயு வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் யதார்த்தம்

“ஆயிரக் கணக்கான பொதுமக்கள் அழிந்தாலும் கூடப் பரவாயில்லை; ஒரு பணக்காரன் அல்லது அதிகாரி கூடப் பாதிக்கப்படக் கூடாது”

விபத்து நடந்து 26 ஆண்டுகளுக்குப் பின்பு போபால் விசவாயுக் கசிவு வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது. பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கும் உயிரினங்கள் மற்றும் சுற்றுப்புற சூழலின் அழிவிற்கும் மாசுபடுதலுக்கும் காரணமாக இருந்த அந்த துயர நிகழ்வின் குற்றவாளிகள் 7 பேருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உடனேயே அவர்கள் ஜாமின் கொடுத்து சிறைக்குச் செல்லாமல் வெளியிலும் வந்துவிட்டனர். இந்த விபத்திற்குக் காரணமான யூனியன் கார்பைடு இந்திய பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு மற்றும் இந்திய அரசின் கூட்டு முதலீட்டில் உருவான நிறுவனம் ஆகும்.


விபத்து நடந்த பின்னர் அமெரிக்காவின் இதன் தாய் நிறுவனம் டோ கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்திற்கு அதன் பங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டது. விபத்து நடந்த வேளையில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்த ஆண்டர்சன் என்பவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு அவர் நம் நாட்டை விட்டுச் செல்வதற்கும் அனுமதிக்கப்படார். அதற்கு ஏற்பாடு செய்து அனுப்பியது அப்போதைய மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜீன் சிங் ஆவார். தற்போது அவர் அதற்குக் காரணம் அவரல்ல எனவும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே அது நடைபெற்றது எனவும் கூறுகிறார். இந்தத் தீர்ப்பில் மேற்படி ஆண்டர்சனின் பெயரும் குறிப்பிடப்படவில்லை. அவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவும் இல்லை.
இறந்தவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் போதிய இழப்பீடு பெற டோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரலாம் என்ற கேள்வி எழுந்தபோது அது சரியல்ல என்று திருவாய் மலர்ந்தருளியது தற்போதைய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் ஆவார். இறந்தவருக்கும் , பாதிக்கப்பட்டவருக்கும் சேர்த்து 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் யூனியன் கார்பைடு நிறுவனத்தால் வழங்கப்பட்டன. அதன்மூலம் இறந்தவர், பாதிக்கப்பட்டவர் அனைவருக்கும் கிடைத்தது. வெறும் 15000 ரூபாய்களாகும்.

இத்தகைய கொடுமை உலகில் வேறு எங்கும் நடக்குமா, உலகின் எந்த ஆட்சியாளர்களும் இந்திய ஆட்சியாளர்கள் நடந்து கொண்டது போல் முக்கிய குற்றவாளியைத் தப்பிக்க விடுவது, புதிதாக வாங்கிய நிறுவனத்திடம் இழப்பீடு கேட்பது முறையல்ல என்று ஆலோசனை வழங்குவது, மிகக் கொடுமையான பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு வெறும் 15000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குவது , வழக்கை முடிக்க 26 ஆண்டுகள் ஆக அனுமதித்து மக்களின் மனத்திலிருந்தே அந்நினைவு அகல வழிவகுத்து ஒரு நிறுவனத்தைக் காப்பாற்றுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்களா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

விதி மீறல்களே விதியாகிப் போன நிலை

1984 டிசம்பர் 2 , 3 தேதிகளில் இவ்விபத்து மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் நிகழ்ந்தது. இந்த நிறுவனம் அதன் துவக்கத்திலிருந்தே பல விதி மீறல்கள் மூலமே உருவானது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் இதுபோன்ற உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வேதிப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட இரசாயனத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் தாய் நிறுவனமான அமெரிக்க நிறுவனத்தில் செய்யப்பட்ட பாதுகாப்பு மற்றும் விபத்துத் தடுப்பு வசதிகள் இங்கு செய்யப்பட வில்லை. உற்பத்திச் செலவைக் குறைக்கிறோம் என்ற பெயரில் அந்நிய நாடுகளின் முன்னேறிய பாதுகாப்புக் கருவிகளை விபத்துத் தடுப்பிற்குப் பயன்படுத்தாமல் அத்தனை தூரம் முன்னேராத பின்தங்கிய இந்திய உபகரணங்களைக் கொண்டு தற்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மலிவான செலவில் இதன் உற்பத்திப் பொருளான பூச்சிக் கொல்லியைத் தயாரிப்பதற்காக இதே பூச்சிக்கொல்லி மருந்து தயார் செய்யும் பெரும்பாலான நிறுவனங்கள் பயன்படுத்தாத எம்.சி.ஐ. என்று கூறப்படும் மிகவும் அபாயகரமான வேதிப்பொருள் மூலப் பொருளாக இங்கு பயன்படுத்தப்பட்டது. அந்த மூலப் பொருளும் விபத்து நடந்த வேளையில் அனுமதிக்கப்பட்ட அளவினைத் தாண்டி 20 டன் என்ற அளவிற்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது.
தற்காப்பு வசதிகள் மிகவும் பின் தங்கியவையாக இருந்தது ஒருபுறம் இருக்க அந்த ஏற்பாடுகளும் அதற்கான உபகரணங்களும் உரிய முறையில் பராமரிக்கப்படவும் இல்லை. எடுத்துக்காட்டாக கிடங்கில் வைக்கப் பட்டிருந்த எம்.சி.ஐ. வேதிப் பொருளுடன் நீர் கலந்தால் உருவாகும் விசவாயுவினை முழுமையாக கொள்ளும் அளவிற்கு அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்றுக் குடுவை அமைக்கப்படவில்லை. தண்ணீருடன் வினைபுரியும் தன்மை வாய்ந்ததாக அந்த வேதிப்பொருள் இருந்தும் அங்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர்க் குழாய்கள் கசிவு ஏற்படாமல் இருக்கும் வகையில் பராமரிக்கப்பட வில்லை. ஆலையின் இந்த அபாயகரமான பகுதியைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதற்குத் தேவைப்படும் எண்ணிக்கையில் தொழிலாளர் நியமிக்கப்பட வில்லை. விசக்கசிவு ஏற்பட்டால் அதனை விசமற்ற தாக்கி வெளிவிடும் தன்மை கொண்ட வேதிப்பொருள் உரிய அளவில் வைக்கப்படவில்லை.

தானாகவும் உணரவில்லை; விபத்துகள் தலையில் கொட்டிய பின்பும் மாறவில்லை
விபத்துகள் போன்றவை நேர்வதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் இதுபோன்ற கடும் சேதம் விளைவிக்கும் அளவிற்குத் தற்காப்பு ஏற்பாடுகளில் உள்ள சாதாரணக் கோளாறுகள் அமைவதில்லை.
ஆனால் இந்த ஆலையைப் பொறுத்தவரையில் 81 ம் ஆண்டு முதல் விபத்து நடந்த 84 ம் ஆண்டு வரை உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய இரு பெரிய விபத்துகள் நடந்தன. முதல் விபத்தில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். அடுத்த விபத்தில் 25 பேருக்கு மேல் கடும் பாதிப்பிற்கு ஆளாயினர். அவை அங்கு வேலை செய்பவரை மட்டும் பாதித்ததால் வெளி உலகிற்குப் பெரிதும் தெரியவில்லை.
அவ்வாறு ஏற்பட்ட பின்னரும் கூட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் புதிதாக மேற்கொள்ளப்படாதது ஒருபுறம் இருக்க ஏற்கனவே இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைகளும் கூட களையப்படவில்லை.

விபத்தின் வெளிப்பாடும் பாதிப்பின் பரிமாணமும்

அந்தத் துயர சம்பவம் ஏற்பட்ட நாளின் நள்ளிரவு 2 மணிக்கு நச்சுத்தன்மை வாய்ந்ததும் தண்ணீருடன் வினைபுரிந்து மிக அதிக வெப்பத்தையும் நச்சுப் புகையையும் உருவாக்கவல்லதுமான எம்.சி.ஐ. என்ற வேதிப்பொருள் வைத்திருந்த கிடங்கில் தண்ணீர் பெருகத் தொடங்கியது. அவ்வாறு தண்ணீர் பெருகக் காரணம் நிர்வாகத்தின் மேல் அதிருப்தி அடைந்திருந்த ஒரு தொழிலாளியின் நாச வேலை என்று நிர்வாகம் அப்போது கூறியது. ஆனால் அக்கூற்று பின்னாளில் உண்மை அறிவதற்காக நியமிக்கப்பட்ட பல குழுக்களின் விசாரணையின் போது பொய்யானது என்று தெரியவந்தது.
தண்ணீர் அதிக அளவில் விசத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் வைத்திருந்த கிடங்கில் தேங்கியதன் காரணமாக அங்கு வேதியல் வினைபுரிதல் ஏற்பட்டு மிகப்பெருமளவில் அதாவது 400 டிகிரி பாரன்ஹீட் எனும் அளவிற்கு வெப்பம் ஏற்பட்டு கொள்கலத்தில் கொள்ளமுடியாத அளவிற்கு விசவாயு உற்பத்தியானது. அந்த விசவாயு அதிகமாகும் போது வெளியேற்றப்படுவதற்காக சில பாதுகாப்பு வால்வுகள் வைக்கப்பட்டிருப்பது வழக்கம். இல்லையயனில் அந்த கொள்கலமே வெடித்துச் சிதறிவிடும். வெப்பமும் வெப்பத்தின் விளைவாக அளவு கடந்த வாயுப் பொருளும் கொள்கலத்தில் நிரம்பியவுடன் தற்காப்பு வால்வினைப் பிடுங்கிக் கொண்டு விசவாயு வெளியேறியது.

காற்றைவிடக் கனமானதாக இருந்த அந்த வாயு ஒரு மேக மூட்டம் போல் போபால் நகரைச் சுற்றிப் படர்ந்தது. போபால் நகரத்தில் மொத்தமுள்ள 56 வார்டுகளில் 36 வார்டுகளில் இந்த விச வாயுப்பரவல் ஏற்பட்டது. விசவாயு தாக்கியவுடன் நுரையீரல் பாதிக்கப்பட்டு பலரும் உயிரிழந்தனர்.
அவ்வாறு உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை அரசால் 2,000, 3,000 என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் உறுதி செய்யப்படாத வட்டாரங்களின் புள்ளி விபரங்கள் 15000 லிருந்து 50000 வரை என்று கூறின.

இராசயனப் போர் ஒத்திகையா?

இதை ஒட்டி இவை உண்மையல்ல என்று ஒதுக்கித்தள்ள முடியாத பல கருத்தோட்டங்கள் பல வட்டாரங்களால் அப்போது முன்வைக்கப்பட்டன. அவற்றை இப்போதும் கூட ஒதுக்கித் தள்ளுவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. அப்படிப்பட்ட அனுமானங்களில் ஒன்று ஏன் இது இரசாயன யுத்தத்திற்கான ஒரு ஒத்திகையாக இருந்திருக்கக் கூடாது என்பதாகும்.
ஏனெனில் வியட்நாம் யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கம் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படாமல் உயிரை மட்டும் பறிக்கக்கூடிய ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. அதனால் தான் அத்தன்மை வாய்ந்த நாபாம் குண்டுகளை வியட்நாம் போரின் போது அமெரிக்கா பயன்படுத்தத் தொடங்கியது.

போபாலில் ஏற்பட்டது போன்ற விசவாயு போர்களில் பயன்படுத்தப்பட்டால் அது சொத்துக்களைச் சேதப்படுத்தாததோடு உயிர்களை மட்டுமே பறிக்கக் கூடியதாக இருக்கும். எனவே மனித உயிரின் அருமை தெரிந்தவர் என்று கருதப்படும் அமெரிக்க மற்றும் ஐரோப்பியர்கள் வாழும் பகுதிகளில் இது போன்ற அபாயகரமான சோதனைகளைச் செய்ய முடியாது என்பதால் அதனை ஏன் இந்தியாவில் அது சோதிக்க முயன்றிருக்கக் கூடாது என்ற கேள்வி பலரின் மனதில் அப்போது எழுந்தது. இப்போதும் அதனை அகற்றப் போதிய ஆதாரங்கள் யாராலும் முன்வைக்கப்பட வில்லை. இருந்தாலும் தற்போது அனைத்துத் தரப்பினரிடமும் இது குறித்த ஒரு வேறுபட்ட அணுகுமுறை நிலவுகிறது. அதாவது வியக்கத் தகுந்த விதத்தில் யாருமே இக்கேள்வியை இப்போது முனகல் தொனியில் கூட எழுப்பவில்லை.

வெறும் கருத்தின்மையும் கவனக் குறைவுமா

அதனை மிகைப்படுத்தப்பட்ட சிந்தனை என்று ஒருபுறம் ஒதுக்கி வைத்தால் கூட அதைத்தவிர்த்து அந்த நிறுவனம் இழைத்த பிற பல குற்றங்கள் மிகவும் கொடுமையானவை. சரியான தற்காப்பு உடைகள் , முகமூடிகள் வழங்காமல் தொழிலாளரைப் பணியமர்த்தியதில் தொடங்கி பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோனது வரை அது செய்த குற்றங்களை எந்தச் சராசரி அறிவுள்ள மனிதனும் கூட வெறும் கடமை தவறிய செயல் என ஒப்புக் கொள்ள மாட்டான்.

இத்தனை கொடிய நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிந்திருந்தும், தெரிந்திருந்தது மட்டுமின்றி இந்தப் பேரழிவிற்கு முன்பு அதற்கான வாய்ப்புகளை மிகப்பலமாக எடுத்துரைக்கும் விதத்தில் ஆலைக்குள் பல தொடர் விபத்துக்கள் 81 முதல் 84‡வரை நடந்திருந்தும் உரிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாது அரக்கத் தனமாக இருந்த நிறுவனத்தின் நிர்வாகத்தைக் கடமை தவறி நிர்வாகம் என்று மட்டும் கூறுவது உண்மையைக் கேலி செய்வதாகும்.
அதாவது தற்போது இறந்து போன ஒருவர் தவிர 7 குற்றவாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தண்டனை கருத்தின்மை அல்லது கவனக்குறைவு காரணமாக சாவிற்கு வழிவகுப்பதற்கு வழங்கப்படும் தண்டனையேயாகும். அதாவது மரணம் விளைவிக்கும் வகையில் கவனமின்றி வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுதையயாத்த தண்டனையாகும்.

வேறெங்கும் இப்படியும் நடக்கும் என்று கருத முடியாத அளவிற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோளாறுகள் இருந்தும் அதன் விளைவாக உயிரிழப்பு மற்றும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தும் இதில் சம்பந்தப் பட்டுள்ளது வெறும் கவனக்குறைவே என்ற முடிவிற்கு வருவதற்கு நிச்சயம் பெரும் முயற்சி தேவை.
ஆனால் வருந்தத் தகுந்த விதத்தில் தற்போது வந்துள்ள தீர்ப்பு நடந்துள்ள விபத்து கருத்தின்மையே என்றும் அதில் ஈடுபட்டவர்கள் செய்தது நேரடியாகச் செய்த தவறல்ல; ஒருசில கீழ்த்தட்டு வேலையாட்களின் பாராமுகத்தால் ஏற்பட்ட தவறே என்ற அடிப்படையிலேயே வந்துள்ளது.

தற்போது இத்தீர்ப்பு பல தீவிரமான சர்ச்சைகளை உலெகெங்கிலும் எழுப்பியுள்ள சூழ்நிலையில் அதிலிருந்து மீள்வதற்கு அமைச்சர்களின் குழு ஒன்றினை அமைத்து அது 1500 கோடி ரூபாய் என்ற அளவிற்குப் பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கும் என்ற அறிவித்துள்ளது. அதாவது நமது நாட்டில் சர்ச்சை எழுந்தால் தான் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நம்மை ஆள்பவரை வேறு வழியின்றி ஏனோதானோ என்றாவது செயல் பட வைக்கும் என்ற நிலை நிலவுவது வெளி வந்துள்ளது.
மேலும் தற்போது தான் ஆலை வளாகத்திற்குள் அகற்றப்படாமல் இருந்து கொண்டு நிலத்தடி நீர் முதல் சுற்றுப் புறச்சூழல் வரை அனைத்தையும் பாழ்படுத்தும் நச்சுப் பொருள் அகற்றப்படும் என்பதும் அறிவிக்கப் பட்டுள்ளது. இவையனைத்தும் இதனால் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்த அமைப்புகள் தீர்ப்பின் சாராம்சத்தை ஜீரணிக்க முடியாமல் திரண்டெழுந்து போராடிய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளன.
மக்களின் அதிருப்திக்குப் பதில் கூறும் விதத்தில் சட்ட அமைச்சர் இதுபோன்ற வழக்குகளைச் சரியாக எதிர் கொள்ளும் விதத்தில் தற்போது இருக்கும் குற்றவியல் சட்டம் வலிமைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
நமது ஊடகங்கள் இப்பிரச்னையை அதன் அடிப்படையில் அணுகாமல் இது குறித்து எதிர்க்கட்சிகள் என்ன சொல்லுகின்றன; அதற்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் பதில் என்ன என்ற வட்டத்திற்குள் கட்டுப்படுத்தி மக்களைத் திசை திருப்புகின்றன.
அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் மாநில அரசின் முதல்வரே ஆண்டர்சன் நாட்டைவிட்டுச் சென்றதற்குப் பொறுப்பு என்று பி.ஜே.பி. கூற அவர் உயிருக்குப் பங்கம் நேர்ந்துவிடும் என்பதால் அவர் அவ்வாறு செய்தார் என்ற விளக்கத்தோடு , இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது அரசாங்கங்களே தவிர தனிப்பட்ட அரசியல் வாதிகள் அல்ல என்று காங்கிரஸ் கூறுகிறது. அத்துடன் அதற்குப்பின் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த பி.ஜே.பி. இவ்விசயத்தைக் கண்டு கொள்ளாமலேயே விட்டு விட்டது ஏன் என்று காங்கிரஸ் குரல் எழுப்புகிறது.

மக்கள் அனுபவத்தில் வசதி படைத்தவருக்கு வளைந்து கொடுப்பவையே சட்டங்கள்

நீதிபதிகள் முதற்கொண்டு அனைவரும் இக்கொடுமைக்கு உகந்த தண்டனை குற்றவாளிகளுக்கு வழங்கப்படவில்லை. என்பதை உணர்ந்துள்ளனர். அதனால் இத்தகைய யாரையும் திருப்திப்படுத்தாத தீர்ப்புக்குக் காரணம் நமது சட்டத்தில் உள்ள குறைபாடு; எனவே தீர்ப்பை நொந்து பயனில்லை என்று கூறுகின்றனர்.
ஆனால் சாதாரண மக்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் ஒரு விசயத்தை உணர்ந்துள்ளனர். அதாவது நமது சட்டங்கள் முற்றிலும் நடுநிலைமையானவையாக இல்லை. வசதி படைத்தவர் முன்பு வளைந்து கொடுப்பவையாகவே அவை காலங்காலமாக உள்ளன; அதாவது உழைப்பவருக்குச் சாதகமான சட்டங்கள் அமலாவதில்லை; அவ்வாறே அமலானாலும் மிகவும் காலதாமதமாக அமலாகின்றன
பொதுவாக வசதி படைத்தவருக்கே வளைந்து கொடுப்பவையாக இருக்கும் சட்டங்கள் சம்பந்தப் பட்டுள்ளது உலகிலேயே மிகப்பெரும் பணக்கார நாடான அமெரிக்காவாக இருப்பதால் இவ்விசயத்தில் கவிழ்ந்து படுத்துவிட்டன என்றே அவர்கள் உணர்கின்றனர்.
ஆனால் சட்டங்கள் வர்க்க வேறுபாடு கடந்து அனைவருக்கும் பொதுவானவை என்ற எண்ணத்தினை மக்களிடையே நிலவச் செய்யும் விதத்திலேயே அவை வலிமைப்படுத்தப்படும் என்பது போன்ற வாதங்கள் நமது சட்ட அமைச்சர் போன்றவர்களால் வைக்கப்படுகின்றன. ஆனால் வர்க்கப் பிரிவினை நிலவும் சமூகங்களின் அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் அவற்றின் அடிப்படையிலேயே நடுநிலைத்தன்மை கொண்டவையாக இராது என்பதே சமூகவியல் ரீதியான, விஞ்ஞான பூர்வ உண்மையாகும்.
அந்த அடிப்படையில் பார்க்கும் போது இரண்டு முக்கிய வி­யங்கள் அலசி ஆராயப்பட வேண்டியவையாக உள்ளன. அவற்றில் ஒன்று இன்றிருக்கும் சட்டங்கள் பொதுவாகவும் குற்றவியல் சட்டம் குறிப்பாகவும் நியாயத்தையும் நீதியையும் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றிப் பராமரிக்கக் கூடியதாக அடிப்படையில் உள்ளதா என்பது. மற்றொன்று எத்தனை வலிமைப் படுத்தினாலும் அதன் பலன்கள் மக்கள் நலனை மேம்படுத்துபவையாக உண்மையில் ஆகும் வாய்ப்பினைக் கொண்டவையா என்பது.
அதாவது நீதி அமைப்பு ஒரு குறிப்பிட்ட பொருளாதார அடித்தளத்தின் மேல் கட்டுமானமாக அமைவது. அந்தப் பொருளாதார அடித்தளத்தின் தேவைகளுக்குச் சேவை புரியும் விதத்தில் வடிவமைக்கப்படுவது. ஆனால் அக்குறிப்பிட்ட பொருளாதார அடித்தளத்தின் அடிப்படை மாறாதிருக்கும் போதிலும் கூட அதில் அளவு ரீதியாகத் தோன்றும் பல மாற்றங்கள் மேல் கட்டுமானத்திலும் அதற்குகந்த மாற்றங்களை வேண்டும்.
அடித்தளமும் மேல் கட்டுமானமும்

நமது நாட்டின் பொருளாதார அடித்தளம் முதலாளித்துவமாகும். மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பு மக்களின் வாங்கும் சக்தியைச் சூறையாடி சந்தை நெருக்கடியினைத் தோற்றுவிக்கவல்லது. இன்று அந்த நெருக்கடி முற்றிய நிலையில் உள்ளது. அந்நிலையில் முதலாளித்துவ நலன்களைப் பாதுகாப்பதற்கு எத்தகைய சட்ட மாறுதல்கள் தேவையோ அவை அனைத்தையும் சட்டத்திருத்தங்கள் மூலமாக மேல் கட்டுமான நீதி அமைப்பில் ஆட்சியாளர்கள் எவ்விதத் தாமதமுமின்றிக் கொண்டு வந்து கொண்டேயுள்ளனர்.

உடனே திருத்தப்படும் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள்
ஒரு முதலாளித்துவ அமைப்பில் நடைபெற வாய்ப்புள்ள மக்கள் போராட்டங்கள் அனைத்தின் ஊற்றுக் கண்ணாகவும் இருப்பது சுரண்டலும் அதை மையமாகக் கொண்ட பிற அநீதிகளுமே. எனவே அந்த இயக்கங்கள் முதலாளித்துவ அமைப்பிற்கு ஒரு பெரும் சவாலாகிவிடக் கூடாது என்ற கவலை முதலாளித்துவ அரசு எந்திரத்தை நிர்வகிக்கும் ஆட்சியாளர்களுக்கு எப்போதும் இடைவிடாமல் இருந்து கொண்டேயிருக்கிறது.
அதனால் தான் சட்டத்தில் எப்போதாவது பயன்படுத்த என்ற வகையில் உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவான அரசின் அனுமதி பெற்றே பொது இடங்களில் போராட்டத்தன்மை வாய்ந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்ற 41(சி) சட்டப் பிரிவு தொடர்ச்சியாகத் தற்போது அமலில் இருந்து கொண்டேயுள்ளது.

அதுதவிர வேலை நிறுத்தத்தைத் தடை செய்யும் அத்தியாவசியப் பணிப் பராமரிப்புச் சட்டம் போன்றவையும் உருவாக்கப் பட்டுள்ளன. தொழிற்சங்கம் அமைக்க 7 பேர் இருந்தால் போதும் என்றிருந்த தொழிற்சங்கச் சட்டம் தற்போது குறைந்த பட்சம் 100 பேர் வேண்டும் என்று திருத்தப் பட்டுள்ளது. பணிப்பாதுகாப்பை இல்லாததாக ஆக்க வழிவகுக்கும் சட்டத் திருத்தங்கள் அரசின் அஜெண்டாவில் உள்ளன.

அதைப் போன்றவையே புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கச் செயல்பாடுகளை அனுமதிக்காதிருப்பதற்கு வழிவகுக்கும் சட்டங்களும். ஆளும் முதலாளி வர்க்க நலன்களுக்கு உகந்த விதத்தில் எவ்விதத் தாமதமும் தயக்கமுமின்றி சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவதில் எத்தனை முனைப்புடன் ஆட்சியாளர்கள் உள்ளனர் என்பதையே இது கோடிட்டுக் காட்டுகிறது.

ஆனால் அதே சமயத்தில் தொழிலாளருக்குச் சில உரிமைகள் வழங்குவதற்காக என்று தொழிலாளர் போராட்டங்களின் விளைவாக உருவாக்கப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் பல ஆதிகாலத்தில் அவை உருவாக்கப்பட்ட வடிவத்திலேயே இன்றும் உள்ளன. உதாரணத்திற்கு சம்பளப்பட்டுவாடாச் சட்டம் ரூபாய் 1600 க்கு மேல் மாதச்சம்பளம் பெறுபவர்களுக்குப் பொருந்தாது என்பதாகவே 2005 வரை இருந்தது. 2005ற்குப் பின்னர் தான் அது ரூபாய் 6500 என மாற்றப் பட்டுள்ளது.

அதைப்போல் தொழிற்சாலை விபத்துகளில் உயிரை இழப்பவர்கள் கூட சாலை விபத்துக்களில் சிக்கி மடிபவர்கள் பெறும் இழப்பீட்டைக் காட்டிலும் மிகக் குறைவான இழப்பீட்டினையே தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தின் மூலம் பெற முடியும். அதனையும் கூட சாலை விபத்துக்களில் இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தின் மூலம் வசூலிப்பது போல் அவர் எளிதாக வசூலித்துவிட முடியாது. அதனை தொழிலாளர் ஆணையாளர் வழியாக மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பி, அவர் மூலமே வசூலிக்க முடியும்.


காலாவதியானாலும் கண்டு கொள்ளப்படாத பணக்காரர்களையும் பாதிக்கும் ­ரத்துக்கள்

இவ்வாறு முதலாளித்துவ நலன்களுக்குகந்த சட்டத் திருத்தங்களை எவ்விதத் தாமதமுமின்றி கொண்டு வரும் ஆட்சியாளர்கள் உழைக்கும் வர்க்கத்திற்கோ பொது மக்களுக்கோ நீதி வழங்கவல்ல சட்டங்கள் காலாவதியாவதைக் கண்டு கொள்வதில்லை. ஏனெனில் அச்சட்டங்கள் காலாவதியாகி சாதாரண மக்களுக்குப் பயன்படாமல் போவதும் கூட ஆளும் முதலாளி வர்க்கத்திற்குப் பயன்படவே செய்கிறது. அதாவது சில சட்டங்களைத் திருத்தி முதலாளிகளுக்கு உதவுகிறார்கள் , பல சட்டங்களைத் திருத்தாமல் முதலாளிகளுக்கு உதவுகிறார்கள்.

இந்நிலையில் சட்டத்தின் ஆட்சி என்பதும் , அதனை அமல் நடத்தும் அமைப்பினை நீதிக்கான மன்றங்கள் எனவும் கூறுவது பொருத்தமற்றதாக ஆகிவருகிறது. அதாவது சட்ட ரீதியானவை எல்லாம் நியாய பூர்வமானவை என்றும் நியாய பூர்வமானவை எல்லாம் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன என்றும் கருதப்பட முடியாதவையாக நமது சட்டங்கள் ஆகிவருகின்றன.

அதனால் தான் இத்தனை கொடுங்குற்றங்களை இழைத்தவர்களாக இருந்தும் போபால் விசவாயுக் கசிவு விளைவித்த அழிவில் தொடர்புடையவர்கள் இத்தனை எளிதில் தப்பி விட்டனர். பெரும்பாலும் அவர்கள் அடுத்து உயர் நீதிமன்றங்களுக்கு இதனை எடுத்துச் சென்றால் வெறும் அபராதத்துடன் மட்டும் கூடத் தப்பிவிடுவர்.

இது மட்டுமல்ல பல அரசியல் கொலைகளும் யாருக்கும் எவ்விதத் தண்டனையும் வழங்கப்படாமல் மூடிமறைக்கப்பட்டு கொலையுண்ட அரசியல் தலைவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று அடுத்த தலைமுறையினர் எண்ணுமளவிற்கு கேலிக் கூத்துகளாக மாறிவருகின்றன.

இப்போதைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் கொதிப்படைந்து நிற்கும் வரை சட்ட அமைச்சரும் சட்ட அமைச்சகமும் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப் போகிறோம் என்று அறிவிக்கும். ஆனால் நினைவாற்றல் குறைந்தகாலமே இருக்கக் கூடியது; அதிலும் பொது மக்களின் நினைவாற்றல் இன்னும் கூடக் குறைந்த காலமே நீடிக்கக் கூடியது என்பதை நமது ஆட்சியாளர் நன்கறிவர். எனவே நாளா வட்டத்தில் இந்தச் சட்டத்திருத்த அறிவிப்புகள் கிடப்பில் போடப் பட்டுவிடும் அல்லது வசதி படைத்தவர்களும் , முதலாளித்துவ நிறுவனங்களும் எளிதில் தப்பித்துக் கொள்ளும் வகையில் பல ஓட்டைகளை வைத்து அது இயற்றப்படும். இதையே சமூக இயக்கத்தை இயக்கவியல் ரீதியில் விவரிக்கும் அடித்தளம் மேல் கட்டுமானம் குறித்து விவரிக்கும் மார்க்சிய ஞானம் கோடிட்டுக் காட்டுகிறது.

சட்டத்திற்கும் நீதிக்கும் நெருங்கிய தொடர்பில்லை

நீதியே சட்டமாகவும் , சட்டமே நீதியாகவும் இருக்க வேண்டுமானால் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டுள்ள முதலாளித்துவப் பொருளாதார அடித்தளம் மாற்றப்பட வேண்டும். அவ்விடத்தில் சோசலிசப் பொருளாதார அடித்தளம் ஏற்படுத்தப் பட்டால் அதன் மேல் கட்டுமானமாக மக்கள் நீதிமன்றங்கள் என்ற நீதியும் சட்டமும் எப்போதும் ஒத்துப்போகக் கூடிய நீதி அமைப்பு ஏற்படும். அந்த மாற்றம் நிகழும் காலம் வரும் வரை நீதிக்கும் சட்டத்திற்குமான இடைவெளி அகன்று கொண்டே போய் ஒருநாள் “ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அழிந்தாலும் அல்லது பாதிக்கப்பட்டாலும் கூடப் பரவாயில்லை; ஒரு அதிகாரி அல்லது பணக்காரன் கூடப் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது” என்ற நிலை சட்டத்தின் எழுதப்படாத நியதியாக ஆகிவிடும் சூழ்நிலை உருவாகிவிடும்.
எனவே இதுபோன்ற விசயங்களில் மக்கள் நம்ப வேண்டியது அவர்களின் ஒன்றுபட்ட இயக்கத்தையே. மிகமிகக் காலதாமதமாக இப்போது வந்துள்ள நிவாரணமும், அறிவிப்புகளும் கூட மக்கள் இயக்கங்களினாலும் மக்களின் ஏகோபித்த கருத்து இத்தீர்ப்புக்கு எதிராகத் திரண்டிருப்பதினாலுமே தவிர நீதி சட்ட ரீதியாக நிலைநாட்டப்பட வேண்டுமென்ற ஆட்சியாளர்களின் அக்கறையினால் அல்ல.
மேலும் ஆண்டர்சன் நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டது தொடர்ந்து தீர்ப்பு வர இத்தனை காலதாமதமானது வரை அனைத்திற்கும் பொறுப்பு அரசாங்கங்களே தவிர தனிப்பட்ட அரசியல் வாதிகள் அல்ல என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை.
அரசாங்கங்கள் என்று கூறுவதற்குப் பதில் அரசு என்று அவர்கள் கூறியிருந்தால் அது இன்னும் பொருத்தமுடையதாக இருந்திருக்கும். ஏனெனில் அரசு ஆளும் வர்க்கத்தைக் காக்கும் நிரந்தர எந்திரம் என்ற ரீதியில் ஆளும் வர்க்க நலனையே பெரிதும் மனதிலிருத்திச் செயல்படும் தன்மை கொண்டது. அந்த அடிப்படையில் அந்த எந்திரத்திற்கு போபாலில் நிகழ்ந்த மனித உயிர் இழப்புகள் ஒன்றும் பொருட்டல்ல. அதற்கு மனித உயிர்களைக் காட்டிலும் இந்திய முதலாளி வர்க்கத்தின் மூலதன மற்றும் வர்த்தக நலன்களுக்கு உதவும் அமெரிக்காவுடனான நல்லுறவே மிகவும் முக்கியம்.
உலகமயச் சூழலில் அமெரிக்க மூலதன வரவினைத் தடுக்கவல்லதான, மனித உயிர்களின் இழப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து நீதியை நிலைநாட்ட முயல்வது உதவாது. எனவே அரசு எந்திரத்தின் இயக்குனர்களாக இருக்கும் அரசாங்கங்கள் அவை எந்தக்கட்சியைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படுபவையாக இருந்தாலும் இதே திசை வழியிலானவையாகத் தான் இருக்கும்.
அதனால் தான் இப்பிரச்னையில் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் முக்கிய எதிர்க்கட்சியான பி.ஜே.பி. கட்சியும் அதன் ஆட்சிக் காலத்தில் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்காவை வற்புறுத்தவில்லை. தீர்ப்பு துரிதமாக வருவதற்கு முயற்சி மேற்கொள்ளவும் இல்லை.
தற்போது வந்துள்ள மற்றொரு தகவல் இதனை இன்னும் உறுதிப் படுத்துகிறது. அதாவது கேசுப் மஹிந்திரா என்ற யூனியன் கார்பைடு கம்பெனியின் மற்றொரு கெளரவத் தலைவராக விபத்து நடந்த கால கட்டத்தில் இருந்தவருக்கு 2002‡ம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம விபூ­ன் விருது வழங்கத் தீர்மானிக்கப் பட்டிருந்திருக்கிறது. அவ்விருதிற்கு அவர் பெயரைப் பரிந்துரைத்தவர் அப்போது காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ் முக் ஆவார். பத்ம விபூசன் கமிட்டியினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அம்முடிவிற்கு ஒப்புதல் அளித்தது பி.ஜே.பி. கட்சியின் சார்பில் அப்போது பிரதமராக இருந்த ஏ.பி.வாஜ்பாய் ஆவார்.

ஆனால் கேசுப் மஹிந்திரா அவ்விருதை ஏற்றுக் கொள்ள அப்போது மறுத்து விட்டார். இல்லையயனில் போபால் விபத்துப் புகழ் கேசுப் மஹிந்திரா பத்ம விபூசன் கேசுப் மஹிந்திராவாக வலம் வந்து கொண்டிருப்பார்.

Comments :

0 comments to “போபால் விசவாயு வழக்கின் தீர்ப்பு உணர்த்தும் யதார்த்தம்”


Post a Comment