Monday, August 16, 2010

ஏழைகளின் பக்கம் யார் இருக்கிறார்கள்?


யாருக்காக கிடைத்தது சுதந்திரம்

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் சேர்த்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்திய அரசால் முன்பு இயற்றப்பட்ட பல சட்டங்கள் ஒரு சம நிலையை உருவாக்கவே பயன்பட்டன. தொழில் தகராறு சட்டம் மற்றும் பல தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாலர்களுக்கு உரிய உரிமையை வழங்கும் அதே சமயம் முதலீடு செய்யும் தொழில் அதிபர்களையும் பாதிக்கா வண்ணம் இருக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அனைத்தும் இருந்தும் அதனை செயல்படுத்தும் அரசு நிர்வாகம் பாரபட்சமாக செயல்படுவது ஏன்? என்று பலரும் யோசிப்பதில்லை .


இன்றைய அரசியலில் நிலவும் அவலம்

இன்று ‘நான் ஒரு அரசியல் வாதி’ என்று ஒருவர் அறிமுகப்படுத்தினால் அவரை குறித்து ஒருவித பயம் வருமே தவிர அவர் மீது வெறுப்பே பெரும்பான்மையோருக்கு ஏற்படுகிறது . இது ஏன் ? சுதந்திர போரட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சி , கம்யுனிஸ்ட் கட்சி அனைத்துமே பங்கு பெற்று கடுமையாக போராடினர். அவர்களில் பலர் தங்களின் இன்னுயிரை நாட்டின் சுதந்திரத்திற்காக சமர்பித்தனர் அவர்கள் அனைவரும் மக்கள் நலம் பெற்று நல்வாழ்வு வாழவே தங்களின் பொன்னான நேரத்தை , இன்னுயிரை , தாங்கள் பெற்றிருக்க வேண்டிய நல்ல வாழ்க்கையை தியாகம் செய்தனர், பணம் படைத் தவர்களில் சிலர் கூட தங்கள் ஒட்டு மொத்த செல்வத்தையும் இழந்து முரட்டு கதராடை உடுத்தி போராடி சிறை சென்று எண்ணில் அடங்காத துன்பத்தில் வாடியதன் விளைவு தான். இன்று நாம்மை நாமே ஆளக்கூடிய சுதந்திரம் நமக்கு கிடைதுள்ளது .



இந்த சுதந்திரத்தில் காங்கிரஸ் மட்டுமல்ல , கம்யுனிஸ்ட் கட்சியும் மற்றும் பிற அமைப்புகளின் பல தலைவர்களும் ஏட்டில் எழுதவியலாத பல துன்பங்களை அனுபவித்தனர், என்பது மறுக்கவோன்னாதது. பண்டிட் ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசு தங்களுக்கு விமோசனம் தரும் என்று நம்பினார்கள் நமது இந்திய மக்கள். அதைப்போலவே அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் அப்பழுக்கில்லாமல் மக்களை மையப்படுத்தியே திட்டங்களை தீட்டினர். பல தொழிற்சாலைகளை கொண்டு வந்தனர் , லாபம் அதிகம் ஈட்டாத சில தொழில்களை அரசே எடுத்தும் , ஆரம்பித்தும் நடத்தியது. அனால் இன்று எது போன்ற சூழ்நிலை நிலவுகிறது என்றால் சாதாரண ஏழைகளுக்கு இங்கு எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் வழங்காமல் மறுக்கப்படுகிறது. காங்கிரஸ் அரசோ , பி.ஜே.பி. அரசோ , கம்யூனிஸ்ட் அரசோ, அல்லது பிற எந்த அரசாக இருந்தாலும், வேறு எந்த மாநில கட்சிகளாக இருந்தாலும் இது வரை எந்த ஆட்சி அதிகாரத்தையே நுகராத சிறிய கட்சியாக இருந்தாலும் ஏழை ,அடித்தட்டு மக்களுக்கு நலன் பேணும் எந்தவிதமான அறிவியல் பூர்வமான திட்டங்களையோ , பொது மக்களின் அன்றாட அத்தியாவசியமான கல்வி விசயத்திலோ , மருத்துவ வசதிகளையோ , சிறப்பான போக்குவரத்து வசதிகளையோ விளம்பரம் தேட வேண்டும் என்ற நோக்கத்தில் அல்லாமல் உண்மையான சமூக அக்கறையோடு செய்து தருவதில்லை. எதிர் கட்சிகளும் எந்தவிதமான ஆக்கபூர்வமான போராட்டங்களையும் நடத்தாமல் நாங்களும் இருக்கிறோம் என்பதிற்காக சில அடையாள பூர்வமான போராடங்களை நடத்துகிறதே தவிர எந்த விதமான ஆக்க பூர்வமான வெகு ஜனங்களுக்கு உபயோகமான எந்தவித போறாட்டங்களையும் முன்னெடுத்து செயல்வதில்லை , என்பதே நிதர்சன உண்மை ஆகும்.

போபாலில் நடந்த பேரவலம்

உதாரணமாக போபாலில் அந்த நிறுவனத்தின் அஜாக்கிரதையின் காரணமாக ஒரு மிகப்பெரிய விபத்து நடைபெற்றது. அதற்குள் நாம் செல்லாவிட்டாலும், அதற்கு பின்பு நடைபெற்றது என்ன? ஜப்பானிலே குண்டு போட்டதை கண்டிக்காத நாடுகளே இல்லை எனலாம், அந்த அளவிற்கு அது இன்று வரை ஹிரோஷிமா தினமாக அனுசரிக்கபடுகிறது. நமது சொந்த நாட்டிலே , சொந்த மக்களை , தங்களின் அதீத லாப வெறிக்காக ஒரு நிறுவனம் செய்த பிழையால் பல்லாயிரக்கனக்கான உயிர்கள் எந்த விதமான நியாமான காரணமும் இல்லாமல் பலி கொடுக்கபட்டது. அதை தட்டி கேட்க கூட முடியாவிட்டால் பரவாயில்லை, குறைந்த பட்சம் அந்த தவறுக்கு தண்டனை பெற்றாவது, கொடுக்க வேண்டாமா நமது இந்திய அரசு. அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும் , அதை பார்க்கும் மக்களுக்கும் எவ்வாறு இந்த இந்திய அரசின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரும், என்பது நகைபிற்க்கு உரியதே.

தமிழகத்தில் உள்ள துயர நிலை

அது மட்டுமா இன்று தேசத்திலே எங்கு திரும்பினாலும் விண்ணை முட்டும் விலை வாசி , மக்கள் நகரங்களில் வாழவே முடியாத அளவிற்கு அதிகபடியான வீட்டு வாடகை உயர்வு , இங்கு மின் சப்லையே இல்லா விட்டாலும் கூட அதிகபடியான மின் கட்டண உயர்வு , அறிவிக்கபடாத பஸ் கட்டண உயர்வு, ஏழை மாணவர்கள் கல்வியே பெற முடியாத அளவிற்கு கல்வி கட்டண உயர்வு , மருத்துவ மனைக்கு போனாலே திரும்பி வர முடியுமா? என்று தெரியாத அளவிற்கு ஆகாயத்தில் நிற்கும் மருத்துவ கட்டணங்கள் , இன்று வேலைக்கு அலுவலகம் நுழையும் வரை நாம் வேலையில் இருக்கிறோமா என்பது நிச்சயமில்லை, அந்த வேலையும் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத அளவிற்கு கொடுமையானது என்பது இன்னொரு பக்க முள்ள உண்மையே.

எதிர் கட்சிகளின் அறிக்கை அரசியல் அக்கப்போர்

இவ்வாறு ஏழை மக்கள் பல வழிகளிலும் எண்ணிலடங்காத வேதனையோடு வாணலியில் வறுபடும் புழுவை போல துடிக்கின்றனர். நடு இரவில் மின்சாரம் இல்லாமல் தூக்கம் இழந்து அவதியுறுகின்றனர் . இந்த சாதாரண அடித்தட்டு மக்கள் தாங்கள் படும் , மற்றும் படப்போகும் துன்பங்களுக்காக , தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை பேச யாராவது , எந்த அரசியல் கட்சியாவது முன்வராதா
என்று ஏங்கி தவிக்கின்றனர். தாங்கள் படும் பிரச்னைகளின் ஒரு பகுதியலவிர்க்காகவாவது பேசும் எதிர் கட்சிகளை ஆதரித்து அவர்களை பூரண விருப்பத்தோடு ஆட்சியில் அமர வைக்கின்றனர் . அனால் திரும்பவும் முதலில் இருந்தே வரலாறு திருப்புகிறது , எந்த எதிர் கட்சி இவர்களுக்காக குரல் கொடுத்ததோ அதே கட்சியானது ஆளும் கட்சியான பின்பு அந்த முந்தய ஆட்சியாளர்களின் தவறையே திரும்பவும் செய்கிறது. மீண்டும் ஒருமுறை வரலாறு திரும்புகிறது. பல ஜாதிக்கட்சிகளும் அந்த ஜாதியிலையே உள்ள ஏழைகளின் எண்ணி பார்க்கவியலாத துன்பகளுக்கு எதிராக போராட முன் வருவதில்லை . இவற்றிக்கு எல்லாம் தீர்வு தான் என்ன 64 வது சுதந்திர தினம் கொண்டாடினாலும் , அந்த சுதந்திரமானது அனைவருக்கும் கிடைத்து உள்ளதா என்றால் அது ஒரு மிக பெரிய கேள்வி கு றியாகத்தான் இன்று எழுந்து நிற்கிறது.

அரசியலே ஒரு தொழில் ஆகி போன சூழ்நிலை

இன்றைய அரசியல் என்பதே முதலீடு செய்து அதில் லாபம் ஈட்டும் லாபகரமான தொழிலாக உருமாறிவிட்டது , எம்.பி. பதவியும் , எம்.எல்.ஏ. பதவியும் இன்று பணம் உள்ளவர்களுக்கு விலை பேசி விற்கப்படுகிறது . இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் எந்த நாட்டிலும் நடக்காத அளவிற்கு மிகப்பெரிய ஊழல் நடந்தது இப்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவிற்கு உலக அளவில் மிகப்பெரிய தலைகுனிவை, ஏற்படுத்தும் மிகப்பெரிய தேச அவமானம் ஆகும். அண்மையில் கிரிகெட் போட்டிகளில் நடந்த பேரமும், முறைகேடுகளும் சந்தி சிரித்தது. தியாகி பகத் சிங்க் போன்றவர்கள் கனவு கண்ட சுதந்திர இந்தியாவில், இது போன்ற நிகழ்வுகளை அனுமதிப்பது என்பது நமது தேச சுதந்திரத்திர்க்காக பாடுபட்ட, உயிர்கொடுத்த , அனைத்து தியாகிகளையும் அவமதிப்பதாகும் .

மேசியா வருவாரா, மீட்சி தருவாரா ?

இன்று பெருக்கெடுத்து ஓடும் நுகர்வு கலாச்சாரம் நம் அனைவறையும் அதில் தள்ளி நாம் அதில் இழுத்து செல்லப்பட்டு கொண்டு இருக்கிறோம் . சாதாரண மக்களின் பிள்ளைகள் நல்ல கல்வியை பெற முடியாமல் போதையிலும், வேலையில்லாத சூழ்நிலையிலும் , போதைக்கு அடிமையாகியும் அவர்களுக்குள்ளேவெறி வாதம் தூண்டப்பட்டு வன்முறை அமைப்புகளின் கைபாவைகளாகி, அதிலும் ஹிந்து வெறிவாத அமைப்புகளிடம் சிக்கி தாங்களும் அழிவதோடு , தங்களை சேர்ந்த இன மக்களையும் அளிக்கும் சூழ்நிலைக்கு தள்ள பட்டு உள்ளனர் . காஷ்மீர் மாநிலத்திலே எந்த பெரிய கட்சியும் இந்திய அரசை எதிர்த்து போராடாத காரணத்தால் தாங்களே ராணுவத்திற்கு எதிராக கல் எறிவது போன்ற செயல்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டி உள்ளது, அந்த அளவிற்கு ஏழை மக்களுக்காக போராடும் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் உள்ளது. இதற்கெல்லாம் தீர்வு தான் என்ன ? பகத் சிங்க் ,நேதாஜி போன்றவர்கள் கற்றுக்கொடுத்த போராட்டவழிமுறைகள் எல்லாம் என்னவாயிற்று .ஏழை மக்கள் நாதி அற்று போய் விட்டார்களா . இன்று இருபதெல்லாம் அவர்கள் சொன்னதற்கு நேர் எதிரானதாகவே அல்லவா நாம் செய்து கொண்டு இருக்கிறோம். அதன் விளைவே லஞ்சமும், ஊ ழலும் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று ஏழைகளுக்காகவும் , ஒடுக்கப்படவர்களுக்காகவும் குரல் கொடுத்து அவர்களை மையப்படுத்தி கட்சி அமைத்து ஆடம்பரம் தவிர்த்து 'உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்' என்று உறுதி கொடுக்க கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்.இன்றைய ஏழை இந்திய மக்கள் தங்களுக்காக அரசியல் நடத்த ஒரு மேசியாவை எதிர் நோக்கி காத்து கிடக்கிறார்கள். அந்த மேசியா வருவாரா இவர்களுக்கு விமோசனம் தருவாரா? எந்த மெசியாவும் விண்ணில் இருந்து வர போவதில்லை . ஏழை மக்கள் தாங்கள் படும் துன்பத்திற்கு யார் காரணம் என்று புரிந்து கொண்டு, யார் எதிரி என்று தெரிந்து கொண்டு, எந்த வகையான போராட்டம் தங்களுக்கு ஏற்றது என்று ஆராயுந்து, தெளிவான குறி கோலுடன் போராடினால் தவிர அவர்கள் படும் துன்பத்திற்கு இந்த 64 வது சுதந்திர தினம் அதுவும் ஒரு நாளே தவிர நமக்கான நாளாக அது இருக்காது . நம்மிடம் இழப்பதற்கு அடிமை சங்கிலி தவிர வேறு ஒன்றும் இல்லை அனால் நாம் பெறுவதற்கு பொன்னுலகமே இருக்கிறது என்பதை நினைவில் நிறுத்துவோம். போராடுவோம். வெற்றியடைவோம்.

Comments :

0 comments to “ஏழைகளின் பக்கம் யார் இருக்கிறார்கள்?”


Post a Comment