உமாசங்கருக்கு ஆதரவாக எழும்பும் குரல்கள் அனைத்தும் ஓன்று திரண்டு ஊழலுக்கு எதிரான இயக்கமாக மலர வேண்டும்.
கருணாநிதியின் ஆட்சியின் ஊழல்களை திரை கிழித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பணி இடைநீக்கத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம்.
உழைக்கும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள்
சாதாரண உழைக்கும் மக்கள் பாதிக்கப்படும் போதும், இலங்கை தமிழர்கள் கொடூரமாக பேரினவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட போதும், அது காவிரி நீர் பிரச்னையாக இருந்தாலும் , சாதாரண மக்களின் உரிமைகளை பறிக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும் , காவல் துறை அராஜகமாக செயல்பட்ட போதும், ஜனநாயகத்தை பாதுகாக்க எழும்பும் முதல் கண்டன குரல் வழக்கறிஞர்களின் குரலாகத்தான் இருக்கும். வழக்கறிஞர்களுக்கு காப்பு நிதி ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தபட வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் நீண்ட காலக்கோரிக்கை. அதற்காக திரைதுறையினரை போலவோ, மற்ற அரசு துறைகளை போலவோ முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தியோ , கோரிக்கை மனு கொடுத்தோ தங்கள் காரியத்தை வழக்கறிஞர்கள் ஒரு போதும் சாதித்து கொண்டதில்லை, அந்த தார்மிக முதுகெலும்பு தான் இன்றும் கொஞ்சமாவது ஏழைகள் நீதிமன்றம் சென்று நீதி பெற முடிகிறது என்றால் அதற்கு காரணமாக இருக்கிறது. இன்று தீங்கியல் சட்டம் என்று ஒரு சட்டம் தொகுக்கப்பட்ட முந்தய வழக்குகளை கொண்டுள்ளது அதற்கும், அது போல பல மக்கள் நலச்சட்டங்கள் உருவாக காரணமாகவும் , மனித உரிமை எங்கு மீறப்பட்டாலும் அதற்கு ஆதரவாகவும் , ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதிலும், சமூகம் சீர்திருத்த படவேண்டும் என்பதில் அக்கறையும் , பொது நல வழக்குகள் மூலம் அரசின் தவறான போக்குகளை நீதிமன்றகளில் தட்டி கேட்கவும், பல ஊழல்களை வெளிக்கொணரவும், அரசின் தவறான கொள்கை முடிவை கொஞ்சமாவது தட்டி கேட்கவும் முடிகிறது என்றால் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூடிய சில வழக்கறிஞர்கள் உள்ளதால் தான், இன்று பணம் இல்லாதவர்களும் கூட தைரியமாக நீதிமன்ற படிக்கட்டுகளை நீதி கேட்டு மிதிக்க முடிகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதை போல தான் எல்காட் ஊழல், கல்குவாரி ஊழல், கப்பல் கம்பனி ஊழல், சுமங்கலி கேபிள் விசன் மூலம் அரசு கேபிளுக்கு 300 கோடி நஷ்டம் போன்றவற்றை வெளிக்கொணர்ந்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.